திங்கள், 19 டிசம்பர், 2022

சிறகு முளைத்த வானம்பாடிகள்!





           

நடந்தவை நடந்தவையே!

       

வாழ்க்கை என்னும் கடலில்

நடந்தவை மன அலையாய்

ஓயாமல் நினைவு என்னும்

கரையை தொட்டுவிட்டு சென்றாலும்

நடந்தவை நடந்தவையே!...

எண்ணி எண்ணி

உள்ளம் வாடினாலும்

மாற்றத்தால் மாற்ற இயலாத

விரயமான காலம்

 வருவதில்லை என்னாலும்.....

 கடந்தவை கடந்தவையே!

மறுக்க முடியாத உண்மை

மனமும் தன்னை நினைத்து

சலித்துக்கொள்ளும்

சில நேரம் .....

அலுப்புக்கு மத்தியில்

உயிரும் உடலும் ஒட்டி இருப்பது

இறைவன் கணக்கில்

 மிச்சம் இருக்குது

அச்சம் எதற்கு

உன் அத்தியாயம்

சொச்சம் இருக்குது

 துச்சமாய் கருதி

மன உறுதி என்னும்

படையை திரட்டி

இறுதி வரை

முயன்று எழு

வாழ்க்கை ஒன்று

 அதில் வாழ்ந்தாக

வேண்டும் நின்று...

 துன்பம் காணாத வாழ்க்கை ஏது?

இன்பம் தேடாத மனமும் ஏது?

 இன்பதுன்பம் இரண்டுமே

நிலையாய் வாசம்

செய்வது இல்லையே...

 மாறி மாறி வருவதே

கடவுள் தந்த வரமாக

வந்த சாபமா ?

துன்பத்தை தவிர்க்க

புத்தனை போல் துறந்து

 வாழ எண்ணியும்

 பாவி மனம் வானரம் போல்

 மரத்துக்கு மரம் தாவுதே!...

 சென்ற உறவை  எண்ணி

இருக்கும் உறவை

சிந்தையில் கொள்ளாது

விந்தையில் மயங்குவது ஏனோ?

நிகழ்காலத்தில் வாழாமல்

வருங்கால கனவில்

கற்பனையில் மிதக்குது

வாழாமல் பொசுக்குன்னு சாகுது....

 மாய உலகில்

 மயங்கிக் கிடக்குது ....

மாள்வோம் என்று தெரிந்தும்

மீண்டும் மீண்டும்

உயிர்கள் பிறக்குது

 சாதி சமயன்னு

மார்தட்டி திரியுது

உயர்ந்தவன்  தாழ்ந்தவன்னு

பிரித்தவன் எவனோ?

 அவனே  தன்னை

உயர்ந்தவன் என்பான்...

ஏற்றத்தாழ்வை  பணத்தினில்  பிரிக்குது

அதை வகுத்தவன் எவனோ ?

அவனே தன்னை உயர்ந்தவன்  என்பான்..

எவன் கையில் பணம் இருக்கிறதோ

 அதை பிறருக்கு கொடுக்கும்

 மனம் இருக்கிறதோ

அந்த குணமே கண்ணுக்கு

 புலப்படும் தெய்வமாகிறது...

 வறுமையில் வாழ்பவன்

இல்லாதவன்....

 இருந்தும் இல்லை என்பவன்

 இருப்பதற்கே அர்த்தம் கொள்ளாதவன் ....

இன்சொல் பேசாதவன்

பிறவி முழுதும்  பேசத் தெரிந்தும்

ஊமையாய்  உலவுகிறவன்..

இல்வாழ்வில் உண்மை கொள்ளாதவன்

மனதை கனமாக சுமந்து திரிகிறான்

கண்டதை போடும் குப்பை கிடங்காக வாழ்கிறான்

மானுட மகத்துவம் புரியுது

புரிந்தும் புரியாமல்

மனிதம் இங்கே நசுங்கி  கிடக்குது...

மனிதனை மனிதனாய்

மதிக்க மறுக்குது

அனைத்தும் காற்றினில் பறக்குது

உள்ளம் வெறுக்குது

இந்த அவலநிலை கண்டு கொதிக்குது...

இளமையும் முதுமையும்

இயற்கையில் விளையுது

வறுமையும் செழுமையும்

எத்தனை தலைமுறை கடத்தி

செல்லும் இன்னும் -எத்தனை

தலைமுறை  கடத்தி செல்லும்

இயன்றதை செய்ய முயன்று எழுவோம்...

நடந்ததை கடந்து செல்வோம்....

                           - அ.ஷர்மிளா...

 

 http://sharmilavinkaviaruvi.blogspot.com/