மரப்பாச்சி

 

      மரப்பாச்சி

அழகிய இயற்கை வளம் நிறைந்த ரம்யமான வீராபுரி என்னும் ஊரில் ரமணன்,ரமணி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் .அன்பில் பெயர் போன  தம்பதியாய் இருந்தும் திருமணம் ஆகி பத்து வருடங்களாக குழந்தை செல்வம் இல்லாமல் தவித்து வந்தனர். வேண்டாத தெய்வம் இல்லை, போகாத கோயில் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, இருந்தும் இறைவனை எண்ணி வாழ்ந்து வந்தனர்

  ரமணனும் ரமணியும் அந்த ஊர் பண்ணையார் சிவசாமி அய்யாவின்  வயலில் கூலி வேலை செய்து  வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருந்தனர் .ரமணி தனக்கு குழந்தை இல்லை என்று ஊராரின் கேலி கிண்டலால் மிகுந்த மனவேதனை அடைந்தாள் .மனக்கலக்கம் கொள்ளும் போதெல்லாம் தன்னுடைய திருமணத்திற்கு  தன்னுடைய பெற்றோர் தனக்கு சீதனமாக கொடுத்த மரப்பாச்சியை எடுத்து புலம்பி கண்ணீர் வடிப்பாள். மரப்பாச்சி பொம்மை இடம் பேசுவாள், குழந்தை போல் நினைத்து அதற்கு சட்டை துணி தைத்து  போடுவது, அலங்கரிப்பது என்று அன்றாட பொழுதை கழித்தாள் . இரவில் தூங்கும் போது கூட மரப்பாச்சி பக்கத்தில் இருக்கும். மரப்பாச்சிக்கு தாலாட்டு பாடுவது ,கதை சொல்வது என்று அதை தன்னுடைய குழந்தையாக பாவித்து தன்னுடைய கவலையை மறக்க நினைத்தாள் .

ஊர் மக்கள் இவரின் செயலைப் பார்த்து பித்து பிடித்து விட்டது என்று பேச ஆரம்பித்தனர் அதை அனைத்தையும் காதில் வாங்கியும் வாங்காதவள் போல் மரப்பாச்சியுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் ரமணி .ஆனால் ரமணன் இதையெல்லாம் பார்த்து மன வேதனை அடைந்தார்.

ஒரு நாள் பண்ணையார் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு பங்கஜத்தின் குழந்தை மரக்கிளையில் தூளி கட்டி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது .பங்கஜத்திற்கு முன் ரமணி ஓடிவந்து தொட்டிலை ஆட்டி தாலாட்டு பாடல் ஒன்றை பாட குழந்தை தூங்கிவிட்டது .அது பங்கஜத்திற்கு பிடிக்கவில்லை .அவள் பொறாமையால் மனதுக்குள் ரமணியை வசப்படினாள் .ரமணிக்கு அன்று முழுதும் அந்த குழந்தையின் அழுகுரல் அவளுக்கு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்போது  மரப்பாச்சியை எடுத்து தாலாட்டு ஒன்றை பாடினாள் .

           "கருங்காலி மரப்பாச்சி

              உன்னை போல ஒரு கருவாச்சி

             என் கருவில் நான் சுமந்து

             மகளாக பிறக்க வேண்டும்

             அவள் கையில் உன்னை கொடுத்து விளையாடி

          இந்த ஜென்மம் கழிய வேண்டும் "என்று பாடினாள் .

மறுநாள் பொழுது விடிந்ததும் எப்போதும் போல் பழைய கஞ்சியை குடித்துவிட்டு இருவரும் வேலைக்கு புறப்பட்டனர். வெயில் மிக கடினமாக இருந்ததால் தூக்கில் மோர் கலந்து எடுத்துக்கொண்டு சென்றனர். வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக்கொண்டே நடவு நட்டனர் .திடீரென ரமணி மூர்ச்சையாகி கீழே விழுந்தாள் .உடனே அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து நிழலுக்கு தூக்கிச் சென்று காற்றோட்டமாக அவளை படுக்க வைத்தனர். அவள் கொண்டு வந்த மோரை பருகி சற்று அமைதியாக எழுந்து அமர்ந்தாள் .உடனே மருத்துவச்சியை அழைத்து வந்து நாடி பிடித்து பார்த்தனர் . வெயில் அதிகமாக இருந்ததால் மயக்கம் வந்தது மற்றபடி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றார் மருத்துவச்சி . ஊரார் எல்லாம் அன்று மாலை ஒரே பேச்சு ரமணியை பற்றியே .அதில் பங்கஜம் சொல்கிறாள் நான் கூட ரமணி குழந்தை உண்டாகி இருக்காளோ என்று நினைத்தேன். உடனே அந்தக் கூட்டத்தில் மற்றொருவர் நானும் தான் நினைத்தேன் ஆனால் அவள் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை  என்ற உடனே வேறொருத்தி நான் கூட ஒரு கணம் நினைத்தேன் மரப்பாச்சியை வைத்து திரிந்தவளுக்கு குழந்தை வரம் கிடைச்சிருச்சோனே . ரமணன் அந்த வழியாக போக கூட்டத்தை உடனே கலைத்து விட்டனர். ரமணன் காதில் அவர்கள் பேசியது விழ அதை மனைவியிடம் சொன்னால் வருத்தப்படுவாள் என்று அவர் அதை சொல்லவில்லை .

சில நாட்கள் கடந்தன.. 

    ரமணிக்கு ஒரு ஆசை வந்தது அவர்களுடைய குலதெய்வமான கருப்புசாமிக்கு கடா வெட்டி பொங்கல் வைக்கணும்னு ரமணனிடம் சொன்னாள்.ரமணனும் அதற்கு உண்டான ஆயத்தம் செய்ய முற்பட்டார். குலதெய்வ பூஜைக்காக ரமணியின் தாய்வீட்டு சொந்தமும் ரமணனின்  சொந்தம் எல்லாம் ஒன்று கூடினர் . அதில் முக்கியமான நிகழ்வு கறி விருந்து தடபுடலாக நடந்தது .அது போதாது என்று அவரவர் வீட்டுக்கு பாத்திரத்தில் கொடுத்து வழி அனுப்பினர். அனைவரையும் வழி அனுப்பிவிட்டு தம்முடைய வீட்டுக்கு திரும்பினார்  ரமணனும் ரமணியும். அன்று இரவு தூங்கப் போகும் போது இருவரிடத்திலும் ஒரே நிசப்தம் நிலவியது. ரமணியின் கண்ணில் நீர் வழிகிறது .ரமணனுக்கு தொண்டை குழி அடைக்கிறது மனைவியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை .தன்னுடைய தோளில் இருந்த துண்டை எடுத்து மனைவியின் கண்ணீரை துடைத்தார் .குலதெய்வ பூஜையில் உறவினர்களின் குழந்தைகள் பங்கேற்றதால் மேலும் குழந்தையை பற்றிய கவலை அதிகரித்தது இருவருக்கும் .உடனே  மரப்பாச்சியை கையில் எடுத்து "கருங்காலி மரப்பாச்சி உன்னுடைய அம்மா அழுகிறாள் என்னவென்று கேள்" என்றார் ரமணன் .ரமணி அதற்கு "உன்னுடைய அப்பாவிற்கு தொண்டை வரை அழுகை வந்ததே அது என்னவென்று கேள் " என்றாள் ரமணி. நீ எனக்கு மனைவி மட்டுமில்லை குழந்தையும் கூட இனி நீ கண்கலங்கி நான் பார்க்க கூடாது. இல்லைங்க இனி நீங்க வருத்தப்படுகிற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் என்று ரமணி சொல்ல இருவரும் தூங்கச் சென்றனர்.

 சில மாதங்கள் கடந்து ஓடின...... திடீரென ரமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது .எப்பொழுதும் இல்லாமல் வாந்தி மயக்கம் என்று மாறி மாறி வந்தது .பித்த வாந்தியாக இருக்கும் என்று விட்டுவிட்டனர். ஒரு வாரம் தொடர்ந்து இருந்ததால் மருத்துவச்சியை அழைத்து நாடி பிடித்து பார்த்தனர் .கையைப் பிடித்து பார்த்த மருத்துவச்சி "ரமணி நீ குழந்தை உண்டாகி இருக்கிறாய்" என்று சொன்னார் .அந்த செய்தியை கேட்டதும் அவள் காது  அடைத்துப் போனது , வாய் பேச முடியாமல் திணறியது .மறுபடியும் அந்த வார்த்தையை மனதுக்குள் அசை போட்டாள்.நம்ப முடியாமல் ரமணனை பார்த்தாள் இருவரும் பார்வையால் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்திக் கொண்டனர்.   ரமணி மரப்பாச்சி எடுத்து உனக்கு பாப்பா பிறக்கப் போகிறது என்று சொல்லி  அழுதால். ரமணன் தன்னுடைய மனைவிக்கு பழம், சத்தான உணவுகளை

வாங்கியும் , தயாரித்தும் கொடுத்தார் .இப்படி ஒன்பது மாதங்கள் சென்றது.  வளையல் காப்பும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது .பங்கஜம் வந்து வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தால்.ஊரே ஆசீர்வாதம் செய்தனர் .   பிரசவத்திற்கு ரமணியை அவளுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் .   ரமணனும் ரமணியும்  பிரிவது இதுதான் முதல் முறை. ரமணன் கண்ணில் கண்ணீர் வர பிரியா விடை பெற்றனர் இருவரும்.

 பிரசவ நாளும் வந்தது. பிரசவ வலியால் துடிதுடித்தாள் ரமணி. குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளது  . குழந்தை  தலை கீழே இறங்கவில்லை அதனால் சிரமம் என்றார் மருத்துவச்சி. உடனே ரமணன் மரப்பாச்சியை எடுத்து ரமணியின் கையில் கொடுத்தார் .ரமணி அதை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டார் .புதிய தெம்பு வந்தது போல் இருந்தது .அவள் மரப்பாச்சி உன்னுடைய பாப்பாவை பத்திரமாக வரச்சொல் என்று பேசிக்கொண்டே இருந்தாள்.ரமணன் குலதெய்வமான கருப்பு சாமியிடம் வேண்டிக் கொள்கிறார் .   சிறிது நேரத்தில் குழந்தை நல்ல நிலைக்கு வந்து பிறக்கிறது .மருத்துவச்சி சொல்கிறாள் "மகாலட்சுமி பிறந்திருக்கிறாள்என்று .

ஒரு வாரம் கழித்து குழந்தைக்கு "மகாலட்சுமி " என்று பெயர் சூட்டுகின்றனர். ஐந்து  மாதம்  கடந்தது .. குழந்தைக்கு  விளையாட  மரப்பாச்சியை கையில் கொடுக்கின்றனர் .மரப்பாச்சியை குழந்தை வாயில் வைத்து சப்புகின்றது . அப்போது ரமணனிடம் சொல்கிறார் ரமணி  மரப்பாச்சி கருங்காலி மரத்தில் செய்தது .இந்த பொம்மையை குழந்தை வாயில் வைத்து சப்பினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,சளி, இருமல் குறையும் . இதுதான் இந்த கருங்காலி மரப்பாச்சியின் சிறப்பு என்றார்.

 ரமணன் ,ரமணி, கருங்காலி மரப்பாச்சி , மகாலட்சுமியுடன் சீரும் சிறப்புமாக  வாழ்ந்தனர்.

                                 -அ.ஷர்மிளா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக