சுமைதாங்கி

 

சுமைதாங்கி

 காரனூர் என்னும் ஊரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர்.  விவசாயம்,வணிகம் போன்ற தொழிலை அடிப்படையாய் கொண்டு மக்கள் தங்களின் வாழ்வியல் அமைப்பு இருந்தது.  காரனூர் குக் கிராமம் என்பதால் போக்குவரத்திற்கு வாகனம் செல்ல முடியாத காலம் அது .நடைபயணமாக தான் எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டும் .அந்த ஊரில் கண்ணம்மா என்னும் பெண் விறகு வியாபாரம் செய்து வந்தாள். அவள் கருவேலம் காட்டுக்கு சென்று விறகு வெட்டி தன்னுடைய தலைசுமையாய் சுமந்து வந்து அவரவர் வீட்டுக்குச் சென்று போட்டு வியாபாரம் செய்து வந்தாள். கண்ணம்மா வீட்டில் இருந்து கருவேலங்காடு எட்டு மயில் தூரம் .நடைபயணமே வாழ்க்கை என்பதால் மெலிந்த தேகம், கருத்த ,சுருங்கிய உடல் அவளின் வாழ்க்கை பற்றி சொல்லும் .ஒரு நாள் விறகு சுமை அதிகமாக இருந்ததால் கண்ணம்மாவாள் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் கால்கள்  பின்னியது .இன்னும் சிறிது தூரம் என்று தேத்திக்கொண்டு நடக்க ,முடியாமல் சிறிது தூரத்தில் மரத்தின் கீழ் இருந்த சுமைதாங்கி கல் அவள் பார்வைக்கு தென்பட்டது .சுமையை அதன் மீது இறக்கி வைத்துவிட்டு மரத்தின் கீழ் சிறிது நேரம் இளைப்பாறினாள். பின் மீண்டும் சுமையை எவர் உதவியும் இன்றி தூக்கிக்கொண்டு புறப்பட்டாள்.         

அதற்குள் காலையில் ஆடு ,மாடுகளை ஓட்டி வந்த லட்சுமி தன்னுடைய கால்நடைகள் வெயில் தாங்காமல் அவதிப்படுவதை பார்த்து அந்த சுமைதாங்கி கல்லின் அருகில் உள்ள நிழலில் இருந்த புல்லில் மேய விட்டு மரத்தின் கீழ் சற்று சாய்ந்தாள்.பொழுது சாய ஆரம்பித்ததும் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தாள் .

கண்ணம்மாவும் ,லட்சுமியும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள். இருவரும் ஒரு நாள் எதிர்பாராமல் அந்த சுமைதாங்கி கல்லுக்கு அருகில் இருக்கும் மரத்தின் கீழ் ஓய்வெடுக்கும் போது சந்திக்கின்றனர். அப்போது லட்சுமி தன்னுடைய கைக்குழந்தையுடன் ஆடு ,மாடு மேய்ப்பதை பார்த்து கண்ணம்மாவுக்கு இரக்கம் வருகிறது .குழந்தையை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விட்டுவிட்டு வர வேண்டியது தானே என்று வினாவினாள்  கண்ணம்மா . அப்போது லட்சுமி தன்னுடைய கதையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.  என்னை பெத்த ஐயனும் ,ஆத்தாவும் ஆடு மாடு மேய்ச்சவங்க. நான் பொறந்து ஒத்த புள்ளையா இருக்கேன்னு, இன்னொரு பிள்ளைய பெத்துக்க ஆசைப்பட்டாங்க. நான்  பொறந்து  ரெண்டு வருஷத்துல எங்க ஆத்தா கர்ப்பமா இருந்தாங்க. அந்த வருஷம் ஒரே வறுமை .மழை இல்லை. வானம் பார்த்த பூமியா இருந்துச்சு. வயலெல்லாம் பொட்டல்கடா இருந்ததாம் .ஆடு ,மாடு மேச்சல் இல்லாம ஒண்ணு ஒண்ணா செத்துகிட்டு இருந்தது. எங்களுக்கு ஒரு வேலை தான் கஞ்சி. அப்பனுக்கு வேற வேலை தெரியாது. ஆத்தா தன்னுடைய தாலிய வச்சு ஆடு ,மாடுகளுக்கு தவுடு வாங்கி வைக்குமா. நாங்க அறவயிரும்  , கால்வயிருமா படுத்துக்குவோமாம். பசி, பட்டினிலே  இருந்ததால ஆத்தா தேகம் இளைச்சி ஓடா தேஞ்சு இருக்குமாம். திடீர்னு காய்ச்சல் என்னு படுத்த படுக்கையா ஆகி, நிறைமாத கர்ப்பிணி செத்துருச்சு .எங்க அப்பன் என்ன வளக்க படாத பாடு பட்டார். எங்க ஆத்தா நினைவா தான் இந்த சுமைதாங்கி கல்லை நட்டாங்க .நிறைமாத கர்ப்பிணிகள் இறந்தார் இப்படி சுமைதாங்கி கல் வைப்பாங்க. இங்க வரவங்கள இந்த ஆன்மா ஆசீர்வதிக்கும் என்பது நம்பிக்கை. அதனால தான் என்னுடைய குழந்தையை இங்கு கொண்டு வந்து சிறிது நேரம் ஓய்வெடுப்பேன் என்று  சொல்லிவிட்டு கண்ணீர் வடித்தாள்.அதற்குள் மாலை பொழுது சாய்ந்ததும் இருவரும் அவரவர் வீட்டுக்கு சுமையை சுமந்தும் ஆடு ,மாடுகளை ஓட்டிக்கொண்டும் புறப்பட்டனர். அன்று இரவு கண்ணம்மா தன்னுடைய கணவன் செல்லதுரையிடம் இதைப் பற்றி சொன்னாள். செல்லதுரை மேலும் அதைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார் .

சுமைதாங்கி கல் இரண்டு கல் தூண்களை பாதி பூமிக்குள் செங்குத்தாக சொருகி அதன் மீது  கல்தூண் ஒன்றை வைத்திருப்பர் .சில இடங்களில் சுமைதாங்கி கல்லுடன் தொட்டிலும் இருக்கும் கைக்குழந்தையுடன் வேலைக்கு வருபவர்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு இளைப்பாறவும், பூச்சி எறும்புகளிடமிருந்து காப்பதற்கு இது உதவியா இருக்குமாம். கர்ப்பிணி  பெண்களும் இதை தெய்வமா நினைப்பாங்களாம். தாயையும் குழந்தையும் பத்திரமா பாதுகாக்குமாம். வளர்ந்த குழந்தைகள் சுமைதாங்கி கல்லுக்கு அருகில் உள்ள நிழலில் விளையாட விடும்பொழுது அந்த ஆன்மா பத்திரமா பாதுகாத்து ஆசீர்வதிக்கும்  என்று நம்பறாங்க மக்கள். மேலும் நடைப்பயணமா செல்பவர்கள் தங்கள் தலை சுமையை யார் துணையும் இன்றி ஏற்றவும், இறக்கவும் சற்று  இளைப்பாறவும் இந்த சுமைதாங்கி கல்மேடை அமைந்தது, நம்முடைய ஊருக்கு வரும் வியாபாரிகள் தலைசுமையை இறக்கி வைப்பதற்கும் இந்த கல்  உதவுகிறது. இந்த சுமைதாங்கி கல்லுக்கு அருகில் நிழல் தரும் மரம், தண்ணீர் குழாய் போன்றதும் இருக்கும். இந்த சுமைதாங்கி கல் பெரும்பாலும் நடைபாதை அருகிலும், மரத்திற்கு அருகிலும் , வயல்வெளியில் இருக்குமாம் அதுவும் இல்லாமல் எந்த கர்ப்பிணி நினைவாக அந்த கல் அமைந்ததோ அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லி முடித்தார் .சுமைதாங்கி கல்லை பற்றி தெரிந்து கொண்ட கண்ணம்மா அன்றிலிருந்து எப்பொழுது சென்றாலும் அந்த சுமை தாங்கி கல்லுக்கு அருகில் இளைப்பாரி விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.இதுவே சுமைதாங்கி கல்லின் சிறப்பாகும்.

                                   -.ஷர்மிளா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக